சந்திப்புக் கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.20-

கட்சியின் தேர்தல் முடிவுகளின் வெளிப்படைத்தன்மை குறித்து எழுந்த சர்ச்சைகளையும் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து, மக்கள் நீதிக் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்தின் சந்திப்புக் கூட்டம் இந்த புதன்கிழமை நடைபெற உள்ளது. இது அவசரக் கூட்டம் அல்ல என்றும், ஏழு நாட்களுக்கு முன்பே எம்பிபி உறுப்பினர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டு விட்டதாகவும் பிகேஆர் பொதுச் செயலாளர் டாக்டர் புஃசியா சால்லே தெரிவித்தார்.

கட்சியின் அரசியலமைப்பின்படி, எம்பிபி உறுப்பினர்கள் சிலர் கூட்டத்தைக் கோரியுள்ளனர். இது வழக்கமான மாதந்திரக் கூட்டம் அல்லாமல், எம்பிபி உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில் கூட்டப்படுகிறது. இதற்கிடையில், நடைபெற்று வரும் உட்கட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க அவசர எம்பிபி கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று ஓர் இணையதளம் செய்தி வெளியிட்டது. எம்பிபி உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தால் கூட்டத்தை நடத்தலாம் என்ற கட்சியின் அரசியலமைப்பின்படி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் புஃசியா இந்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தை நடத்த பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, பிகேஆர் 2025 தேர்தலில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகளிலும் செயல்முறையிலும் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து கட்சி தேர்தல் குழுவுக்கு அதிகாரப்பூர்வமாக மேல்முறையீடு செய்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS