பிகேஆர் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றமா?

புத்ராஜெயா, ஏப்ரல்.21

பிகேஆர் கட்சித் தேர்தல் முடிந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படப் போவதாகக் கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

பிகேஆர் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் இல்லை. அரசாங்கம் வழக்கம் போலவே செயல்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பிகேஆர் தொகுதித் தேர்தலில் அமைச்சர் மற்றும் துணை அமைச்சர்கள் சிலர் தோல்விக் கண்ட நிலையில் அமைச்சரவையில் மிகப் பெரிய சீரமைப்பு ஏற்படலாம் என்று கூறப்படும் ஆருடங்கள் தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் கருத்துரைத்தார்.

இது கட்சித் தேர்தலாகும். இதற்கும் அமைச்சரவைக்கும் தொடர்பில்லை. அமைச்சர்கள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளின் சேவைத் திறனை, அவர்களின் அடைவு நிலையை மட்டுமே, அடிப்படையாகக் கொண்டு தாம் மதிப்பீடு செய்வதாகவும், அரசியல் சதுராட்டத்தின் மூலம் அல்ல என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வரும் பிகேஆர் தேர்தலில் முக்கியத் தலைவர்கள் தோல்வி கண்டது தொடர்பில் அமைச்சரவையில் பெரிய மாற்றம் ஏற்படப் போவதாக ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

பிகேஆர் தேர்தலில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், செத்தியா வங்சா தொகுதில் தோல்விக் கண்ட வேளையில் எரிபொருள் மற்றும் நீர் வளத்துறை துணை அமைச்சர் அக்மால் நாசீர் ஜோகூர் பாரு தொகுதியில் தோல்வி கண்டார்.

இளைஞர், விளையாட்டுத்துறை துணை அமைச்சர் அடாம் அலி, ஹங் துவா ஜெயா தொகுதியில் தோல்வி கண்டார்.

ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, புக்கிட் பிந்தாங் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

WATCH OUR LATEST NEWS