சட்டவிரோதக் கோவில் என்ற வார்த்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவீர் – டத்தோஸ்ரீ சரவணன் கோரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல்.21-

சட்டவிரோதக் கோவில் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை அரசாங்கத்தின் அனைத்து இலாகாக்களும், ஏஜென்சிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கேட்டுக் கொண்டார்.

தைப்பிங் மருத்துவமனையின் வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் தொடர்பில் அளிக்கப்பட்டுள்ள புகாருக்கு எதிராக அந்த மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள பதிலைத் தொடர்ந்து முன்னாள் மனித வள அமைச்சரான டத்தோஸ்ரீ சரவணன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அந்த கோவில் தொடர்பாக பொருத்தமான நடைமுறைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக * PCB 965228 சட்டவிரோத கோவிலுக்கு பதில் * என்ற தலைப்பில் அதிகாரப்பூர்வமான கடிதத்தில் தைப்பிங் மருத்துவமனையின் துணை இயக்குநர் அர்னி நடிரா அப்துல் ஹாடி குறிப்பிட்டு இருப்பது தொடர்பில் டத்தோஸ்ரீ சரவணன் எதிர்வினையாற்றினார்.

தைப்பிங் மருத்துவமனை துணை இயக்குநர் அந்த கடிதத்தில் பயன்படுத்திய வார்த்தை நடைமுறையை வன்மையாகக் கண்டித்த டத்தோஸ்ரீ சரவணன், நாட்டில் நிறைய கோவில்கள் பல தசாப்தங்களாக இருந்து வருகின்றன. குறிப்பாக 1965 ஆம் ஆண்டு தேசிய நிலச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னதாகவே இந்து ஆலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, நீண்ட காலமாகவே காக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இத்தகைய பழமை வாய்ந்த கோவில்களை ஹராம் என்று முத்திரை குத்துவது இந்துக்களைப் புண்படுத்தும் செயல் என்பதுடன் அவர்களின் சமய உணர்வைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று டத்தோஸ்ரீ சரவணன் நினைவுறுத்தினார்.

பெரும்பாலான கோவில்கள் பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய காலனித்துவ காலகட்டத்தில் கட்டப்பட்டவையாகும் என்று விளக்கிய டத்தோஸ்ரீ சரவணன், இது தொடர்பாக இன்று காலையில் பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வரலாற்று ரீதியாக இந்தியத் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்த இடங்களில் வழிபாட்டுத்தலங்களை நிறுவுவது ஒரு பாரம்பரியமாகவும் சமயச் சடங்காகவும் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

இந்த கோவில்கள் அன்றைய அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவையாகும். இந்த வரலாற்று உண்மையை யாரும் அவ்வளவு எளிதாக புறந்தள்ளி விட முடியாது, புறந்தள்ளவும் கூடாது என்று டத்தோஸ்ரீ சரவணன் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS