கேவின் மொராயிஸ் கொலையின் பின்னணியில் டாக்டர் குணசேகரே சூத்திரதாரி

புத்ராஜெயா, ஏப்ரல்.23-

முன்னாள் துணை பப்ளிக் பிராகியூட்டர் கேவின் மொராயிஸ் கொலையில், பின்னணியில் இருந்து செயல்பட்ட சூத்திரதாரி, வங்சா மாஜு இராணுவ மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் டாக்டர் ஆர். குணசேகரன் என்று புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கேவின் மொராயிஸ் கொலையில் டாக்டர் குணசேகரன் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், கேவின் மொராயிஸ் எவ்வாறு கடத்தப்பட்ட வேண்டும், அவருக்கு எவ்வாறு மரணம் விளைவிக்கப்பட வேண்டும், சடலத்தை என்ன செய்வது முதலிய சதிவேலைகளைப் பின்னணியில் இருந்து கனகச்சிதமாக முடித்தவர் டாக்டர் குணசேகரன் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் புஃவாட் அப்துல் அஸிஸ், கூட்டரசு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வங்சாமாஜு மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் கொள்முதல் செய்யும் பேரத்தில் ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் டாக்டர் குணசேகரனுக்கு எதிராக நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் அரசு தரப்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டராக ஆஜரானவர் கேவின் மொராயிஸ் ஆகும்.

அந்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே ஓர் அரசாங்க மருத்துவமனையின் மருத்துவரான டாக்டர் குணசேகரன், மிகத் துல்லியமாக கேவின் மொராயிஸைக் கொல்வதற்கு குறி வைத்துள்ளார்.

இந்தக் கொலையைச் செய்தாகக் கூறப்படும் இதர ஐந்து நபர்களுக்கு கேவின் மொராயிஸ் யாரென்று அறவே தெரியாது. கேவின் மொராயிஸை அறிந்து வைத்த ஒரே நபர் டாக்டர் குணசேகரன் மட்டுமே என துணை பப்ளிக் பிராசிகியூட்டர் புஃவாட் அப்துல் அஸிஸ் தமது வாதத் தொகுப்பில் கூறினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் கேவின் மொராயிஸைக் கொலை செய்ததற்காக ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தூக்குத் தண்டனையை எதிர்த்து டாக்டர் குணசேகரன் உட்பட இதர ஐவர் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கு, கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அரசு தரப்பு வழக்கறிஞர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் தலைமையில் மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவினர் முன்னிலையில் இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடைபெற்றது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் டாக்டர் குணசேகரனுடன் சேர்ந்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இதர ஐவரான எஸ். ரவிச்சந்திரன், ஆர். தினேஷ்வரன், ஏகே. தினேஷ்குமார், எம். விஸ்வநாதன் மற்றும் எஸ். நிமலன் ஆகியோரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS