கூலாய், ஏப்ரல்.23-
ஆபாசப் படங்களை வைத்திருந்தது மற்றும் பெண்களின் படங்களை ஆபாசமாகத் தணிக்கைச் செய்ததாக ஜோகூர், கூலாயில் ஒரு தனியார் இடைநிலைப் பள்ளியில் பயின்ற 16 வயது முன்னாள் மாணவன் கூலாய், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.
தன் வசம் ஆபாசப் படங்கள் வைத்திருந்ததை அந்த பையன் ஒப்புக் கொண்டான். ஆனால், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் படங்களை ஆபாசமாகத் தணிக்கைச் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அந்த முன்னாள் மாணவன் மறுத்தான்.
மாஜிஸ்திரேட் ஆர். ஷாலினி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மாணவன், தனக்கு எதிராகக் கூறப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளான்.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை 5.28 மணியளவில் கூலாய், தாமான் இண்டாபுராவில் தனது கைப்பேசியில் 14 வகையான ஆபாசப் படங்களை வைத்திருந்ததாக அந்த முன்னாள் மாணவன் குற்றஞ்சாட்டப்பட்டான்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாணவனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நன்னடத்தைக்காக அந்த மாணவனை ஹென்ரி கெர்னி சீர்திருத்தப் பள்ளியில் தடுத்து வைப்பதற்கும் இந்தச் சட் வகை செய்கிறது.
ஊடகங்கள் வெளியிட்ட தகவல், தனது பள்ளியில் பயின்ற சில மாணவிகள் மற்றும் பெண்களின் படங்களைச் சேகரித்து, அவர்களின் தோற்றத்தைப் பயன்படுத்தி, AI தொழில்நுட்ப உதவியுடன் ஆபாசப் படங்களைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவன் தற்போது பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளான்.
இவ்வழக்கு விசாரணையை வரும் ஜுன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட் ஷாலினி, அந்த முன்னாள் மாணவனை இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு தலா 4 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு அனுமதித்தார்.