புத்ராஜெயா, ஏப்ரல்.24-
இன்று வெளியிடப்பட்ட எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் மீதான பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் ஜெமிலாங் தேசியக் கொடி தவறாகச் சித்தரிக்கப்பட்ட சம்பவத்திற்காக கல்வி அமைச்சு பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
அதே வேளையில் இப்படியொரு தவறு நிகழ்ந்தற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு உறுதி அளித்துள்ளது.
ஜாலூர் ஜெமிலாங் தேசியக் கொடி, நாட்டின் மகத்துவம் மற்றும் இறையாண்மையின் சின்னமாக விளங்குகிறது. இந்நிலையில் இது போன்று கவனக்குறைவாக நடந்த சம்பவத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணையைக் கல்வி அமைச்சு உடனடியாக தொடங்கியுள்ளது. மேலும் அச்சிடப்பட்ட எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் மீதான பகுப்பாய்வு அறிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டதுடன், உடனடியாக திருத்தங்களைச் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.