கோலாலம்பூர், ஏப்ரல்.24-
பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநராக துன் ரம்லி ங்கா தாலிப் நியமிக்கப்பட்டுள்ளார். பேரா மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரான துன் ரம்லி ங்கா தாலிப்பின் பதவிக் காலம், வரும் மே முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
இன்று கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில், சிங்காசானா கெசிலில் நடைபெற்ற பதவி நியமனச் சடங்கில் , 84 வயதான துன் ரம்லி ங்கா தாலிப்பிற்கு பினாங்கு மாநில ஆளுநருர் பதவிக்கான நியமனக் கடிதத்தை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கினார்.
அத்துடன் ரம்லி ங்கா தாலிப்பிற்கு துன் விருதையும் மாமன்னர் வழங்கி கெளரவித்தார். 2025 ஆம் ஆண்டு மே முதல் தேதியிலிருந்து 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நான்கு ஆண்டுகளுக்கு பினாங்கு ஆளுநராக ரம்லி ங்கா தாலிப், பதவி வகிப்பார்.
2021 ஆம் ஆண்டு மே முதல் தேதியிலிருந்து பினாங்கு ஆளுநராகப் பொறுப்பு வகித்து வரும் துன் அஹ்மாட் பூஃஸி அப்துல் ரஸாக்கிற்கு பதிலாக ரம்லி ங்கா தாலிப், பினாங்கு ஆளுநர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
பேரா, பாசீர் சாலாக்கில் பிறந்து வளர்ந்தவரும், பாசீர் சாலாக் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்லி ங்கா தாலிப், பேரா மாநில அம்னோவின் முன்னாள் தொடர்புக் குழுத் தலைவர் ஆவார்.
மத்திய அளவில் நாடாளுமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். முன்னதாக, அவர் 1982 ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் பேரா மந்திரி பெசராக பதவி வகித்தார்.
பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரம்லி ங்கா தாலிப்பின் பதவி நியமன நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.