கோலாலம்பூர், ஏப்ரல்.25-
கோலாலம்பூர், கெப்போங் , மெட்ரோ பிரிமாவில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கின் முன்புறம், ஆப்பிரிக்கப் பிரஜை ஒருவரைப் போலீசார் கைது செய்யும் முயற்சியின் போது, மிக ஆவேசமாக நடந்து கொண்டதாக நம்பப்படும் ஆப்பிரிக்கப் பிரஜை ஒருவர், போலீஸ்காரரைக் கடித்ததில் காது துண்டிக்கப்பட்டது.
இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் நடந்தது. மற்றொரு போலீஸ்காரரின் உதவியுடன் காப்பரல் அந்தஸ்தில் உள்ள போலீஸ்காரர், அந்த ஆப்பிரிக்கப் பிரஜையைக் கைது செய்ய முற்பட்ட போது, இச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்த ஆப்பிரிக்கப் பிரஜையை கைது செய்ய முற்பட்ட போது ஒத்துழைப்பு நல்குவதாகக் கூறிய அந்த நபர், போலீஸ் ரோந்துக் காரில் ஏற்றும் போது, திடீரென்று ஆவேசமாகச் செயல்பட்டு போலீஸ்காரரின் காதைக் கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது.
இடது காது துண்டிக்கப்பட்டு, ரத்தக் கசிவு அதிகமானதைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரர் உடனடியாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். துண்டிக்கப்பட்ட காதை இணைப்பதற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகத் தெரிகிறது.
கல்லூரி மாணவன் என்ற போர்வையில் மலேசியாவில் தங்கியுள்ள அந்த 38 வயது ஆப்பிரிக்கப் பிரஜை, விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை செந்தூல் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஜஸ்னி ஸோபால் உறுதிப்படுத்தினார்.