ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.25-
பினாங்கு மாநிலத்தில் 60 மணி நேர குடிநீர் விநியோகத் தடை இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குத் தொடங்கியது.
24 மணி நேரம், 48 மணி நேரம் மற்றும் 60 மணி நேரம் என மூன்று கட்டங்களாக நிறுத்தப்படவிருக்கும் குடிநீர் விநியோகத் தடை ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் அட்டவணையிடப்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று அமலுக்கு வந்த போதிலும், ஒரு நாளுக்கு முன்னதாகவே குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பினாங்கு நீர் விநியோக வாரியம் மறுத்துள்ளது.
சுங்கை ஆரா, சுங்கை பாக்காப் மற்றும் சிம்பாங் அம்பாட் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகக் கணக்கு வைத்திருப்பவர்கள், ஒரு நாளுக்கு முன்னதாகவே குடிநீர்த் தடை அமல்படுத்தப்பட்டு விட்டதாகவும் இதனால் நீரின்றி வறண்டக் குழாய்களை மட்டுமே தாங்கள் காண முடிந்ததாகவும் கூறியுள்ளனர்.
எனினும் சுங்கை துவா நீர் சுத்திகரிப்பு மையம், உகந்த திறனில் இயங்குவதாகவும், திட்டமிடப்படாத நீர்த் தடைகள் குறித்த புகார்கள் பெரும்பாலும் மின் இணைப்புப் பகுதிகள் மற்றும் மேட்டுப் பகுதிகளொல் உள்ளவர்களிடமிருந்து கிடைத்து இருப்பதாக பினாங்கு நீர் விநியோக வாரியம் தெரிவித்துள்ளது.