வத்திகன் சிட்டி, ஏப்ரல்.26-
கத்தோலிக்கத்க் திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் நல்லடக்கச் சடங்கில் உலகத் தலைவர்கள் உட்பட சுமார் இரண்டரை லட்சம் பேர் பங்கேற்றனர்.
வத்திகன் நகரில் இன்று சனிக்கிழமை மலேசிய நேரப்படி மாலை 4 மணியளவில் போப்பாண்டவர் பிரான்சிஸ் இறுதிச் சடங்குகள் தொடங்கின. வத்திகன் பேராலயத்தில் போப்பாண்டவரின் உடலுக்குத் திருப்பலி செய்து வைக்கப்பட்டது.
வத்திகன் சிட்டியில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்ற வேளையில், ரோம் நகரில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தா மாரியா மெகியோரே பசிலிகாவில் நல்லடக்கம் நடைபெற்றது.
நுரையீரல் தொற்றுக் காரணமாக நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகிய போப்பாண்டவர் பிரான்சிஸ், கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி 266 ஆவது போப்பாண்டவராகப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டார். 1,300 ஆண்டுகள் வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பியர் அல்லாத போப்பாண்டவர், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.