சிங்கப்பூர், ஏப்ரல்.26-
சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் சமயக் கூறுகளின் அடிப்படையில் வாக்களிக்குமாறு மலேசியாவில் உள்ள பாஸ் எனப்படும் மலேசிய இஸ்லாமியக் கட்சி சிங்கப்பூரியர்களை அறிவுறுத்தியிருப்பது, மிக அபாயகரமானது என்று அந்நாட்டின் மூத்தத் துணை அமைச்சர் ஸாக்கி முகமட் எச்சரித்துள்ளார்.
சமயக் கூறுகளின் அடிப்படையில் வாக்களிப்பது என்பது மலேசிய அரசியலில் ஒரு வேளை அவ்வாறு நடைபெறலாம். ஆனால், சிங்கப்பூரில் அதற்கு இடமில்லை என்று ஸாக்கி முகமட் குறிப்பிட்டுள்ளார்.
வரும் மே 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் இரண்டு முன்னணித் தலைவர்கள் தலையிட்டு இருப்பதாக சிங்கப்பூர் அம்பலப்படுத்தியுள்ள வேளையில் ஸாக்கி முகமட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மலேசியாவில் பாஸ், பாரிசான் நேஷனல் போன்ற வெவ்வேறு கட்சிகளை எடுத்துக் கொண்டால், அவை வெவ்வேறு இனங்கள், சமயங்களைப் பிரதிநிதித்து உள்ளன. சிங்கப்பூரில் அவ்வாறு இல்லை. இங்குக் கடந்த 60 ஆண்டுகளாக நாம் சமயங்களுக்கும், இனங்களுக்கும் இடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் வளர்த்து வருகிறோம் என்று ஸாக்கி முகமட் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் சிங்கப்பூரில் சமயம் சார்ந்த கலவரங்கள் இடம் பெற்றதைச் சுட்டிக் காட்டிய அவர், வெளிநாட்டவர்களின் தூண்டுதல்களின் பேரில் சிங்கப்பூரியர்கள் வாக்களிக்கச் செல்வது நாட்டிற்கு மேலும் பல இடர்பாடுகளை விளைவிக்கும் என்பதையும் நினைவுறுத்தினார்.