தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கங்குவா’ தோல்வி படமாக அமைந்த நிலையில், சூர்யாவின் அடுத்த படமான ரெட்ரோ’ மீது அனைவரின் கவனமும் உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 1-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ‘ரெட்ரோ’ படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய சூர்யா, தனது 46-வது படம் குறித்த அறிவிப்பை பகிர்ந்தார். அதன்படி, ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கி அட்லுரியுடன் கை கோர்க்க உள்ளதாகவும் அப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் கூறினார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.