யான், ஏப்ரல்.27-
கெடா, யானில் நடைபெற்ற முகாமில் இருந்து திரும்பிய பின்னர் தொற்று நோயின் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் தற்போது இருவர் மட்டுமே மருத்துவமனையின் நோயாளிகளாக உள்ளனர். மேலும் ஆறு பேர் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கெடா மாநில வீட்டுவசதி, ஊராட்சி மன்றம், சுகாதாரக் ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் 14 வயது மாணவர் ஒருவரும், முகாமிற்கு அவர்களை அழைத்துச் சென்ற 30 வயதுடைய பேருந்து ஓட்டுநர் ஒருவரும் அடங்குவர். தற்போது அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது. புறநோயாளிகளாக சிகிச்சை பெற்ற ஆறு பேர் வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் அரிப்பும் கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளும் இருந்தன.
இதுவரை இந்த நோய் கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதியடையவோ அல்லது தவறான தகவல்களைப் பரப்பவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தொற்றுக்கான காரணத்தைக் கண்டறிய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.