லூமுட், ஏப்ரல்.27-
பேரா, ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் 18 ஆயிரம் வாக்குகள் இலக்கை எட்டாதது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பெரிக்காத்தான் நேஷனல் கூறுவது மறுப்பு நோய்க்குறியின் அறிகுறி என்று பாரிசான் நேஷனல் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு 75 விழுக்காடு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 58 விழுக்காடு மட்டுமே பதிவானது. தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், ஒற்றுமை அரசாங்கத்தின் தேசிய முன்னணி வேட்பாளரின் வாக்குகளைக் குறைத்ததாகக் கூறுவது பெரிக்காத்தான் நேஷனலின் மறுப்பு நிலையைக் காட்டுகிறது என்று தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் கூறினார்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், வாக்கு எண்ணிக்கையைக் குறைத்ததாக பெரிக்காத்தான் நேஷனல் கூறுவது வெறும் சாக்குப் போக்கு. அவர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். குறைந்த வாக்குப்பதிவு விழுக்காடே தேசிய முன்னணியின் இலக்கை அடையாததற்கு காரணம். பொதுத் தேர்தலில் 74.8 விழுக்காடு வாக்குகள் பதிவானதை அடிப்படையாகக் கொண்டுதான் 18 ஆயிரம் வாக்குகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இடைத் தேர்தல்கள்க்ல் வாக்குப்பதிவு குறைவது இயல்பானது. எனவே, தேசிய முன்னணியின் வாக்குகளைக் குறைத்ததாக பெரிக்காத்தான் நேஷனல் கூறுவது பொருத்தமற்றது என்றார்.