சிலாங்கூரில் உள்ள கம்போங் லாபு லஞ்சூட்டில் உள்நாட்டு, பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு தனித்துவமான சமூக சுற்றுலாத் தலமாக மிதக்கும் சந்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது அப்பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. கம்போங் லாபு லஞ்சூட் கிராம மேம்பாட்டு, பாதுகாப்புக் குழு முன்வைத்த மூன்று பொருளாதாரத் திட்ட யோசனைகளில் மிதக்கும் சந்தை கருத்தும் ஒன்றாகும்.
சிலாங்கூர் வீட்டுவசதி, கலாச்சார ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கூறுகையில், மிதக்கும் சந்தை அறிமுகம் சிலாங்கூரின் பெயரை உலகளவில் உயர்த்தும். கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 1க்கும் 2 க்கும் அருகில் இக்கிராமம் அமைந்திருப்பது மிதக்கும் சந்தை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ஒரு சாதகமான அம்சமாகும். எதிர்காலத்தில் சிப்பாங் மட்டுமல்லாமல், சிலாங்கூரின் வடக்கு பகுதியிலும், செகிஞ்சான் போன்ற பகுதிகளில் ஆறுகள் உள்ள சபாக் பெர்ணாமிலும் மிதக்கும் சந்தைகள் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த முயற்சி உள்ளூர் பொருளாதாரத்தில் நல்ல பலனைக் கொண்டு வரும் என்று தாம் நம்புவதாக போர்ஹான் தெரிவித்தார்.
மிதக்கும் சந்தை தவிர, இப்பகுதியில் ஓர் இரவுச் சந்தையும் உருவாக்கப்படும். இது ஒரு சிறு பொருளாதாரத் தளமாகவும், சமூக வணிக இடமாகவும் செயல்படும். கம்போங் அங்காட் மடானி என்பது நாட்டின் வளர்ச்சியில் எந்த சமூகமும் பின்தங்கி விடக்கூடாது என்ற அரசாங்கத்தின் உறுதியின் வெளிப்பாடாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.