ஷா ஆலாம், ஏப்ரல்.27-
புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 70 பேருக்கு சிலாங்கூர் அரசு மூன்று மாதங்களுக்கு தலா 2,000 ரிங்கிட் தங்குமிட வாடகை உதவி வழங்கியுள்ளது. இந்த உதவி சிலாங்கூர் வீட்டுவசதி, சொத்து வாரியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருடின் ஷாரியின் உத்தரவின்படி, இந்த உதவி நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளுக்கு செலுத்தப்படுகிறது. இதுவரை மூன்று மாதங்களுக்கான உதவித்தொகை அதாவது 6,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. உதவி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அடுத்த வாரம் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் உதவி விநியோக செயல்முறை பல்வேறு தரப்பினரால் கவனமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வீட்டுவசதி, கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார். தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக உதவித்தொகை பயனாளிகளின் கணக்குகளுக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். முன்னதாக, புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 396 குடும்பத் தலைவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மாதந்தோறும் 2,000 ரிங்கிட் தங்குமிட வாடகை உதவி வழங்கப்படும் என்று அமிருடின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.