இந்தியர்கள் ஓராணியில் திரள வேண்டும், டான்ஸ்ரீ குமரன் வலியுறுத்து

பத்துகேவ்ஸ், ஏப்ரல்.28-

மலேசிய இந்தியர்கள் இனி வருகின்ற காலங்களில் ஒற்றுமைக்கு, குறிப்பாக, ஓரணியில் ஒரே நோக்கத்தில் இணைந்து செயல்படாவிட்டால்,தொடர்ந்து தோல்விகளையும் பிளவுகளையுமே சந்திக்க வேண்டி வரும் என்று முன்னாள் சுகாதாரத்துறை துணையமைச்சரும் மஇகாவின் முதுப்பெரும் தலைவருமான டான்ஸ்ரீ க.குமரன் எச்சரித்தார்.

நேற்று மலேசியத் தமிழர் தன்மான சிந்தனைப் பேரவையின் 14- ஆம் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தார்.

மூத்தப் பத்திரிக்கையாளரும் அவ்வியக்கத்தின் தேசியத் தலைவருமான எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய டான்ஸ்ரீ குமரன், இந்தியர்கள் பல்வேறு கட்சிகளில் சிதறியிருக்கிறார்கள். அதிலும் பல்வேறு கூட்டணிகளிலும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இந்திய ஓட்டுகள் சிதறடிக்கப்பட்டு இந்தியர்கள் அரசியலில் கேள்வி குறியாக்கப்படுவார்கள்.

அதனால் அவ்வப்போது ஆளப்படுவோரால் புறக்கணிப்புக்கு ஆளாக வேண்டி வரலாம் என்றார்.

மறைந்த இயக்கத் துணைத் தலைவர் காந்தராசு நினைவுகளுடன் தொடங்கிய கூட்டத்தில், அவருக்குப் பதில் துணைத்தலைவராக த.பரமசிவம் நியமிக்கப்பட்டார்.

அவரையொட்டி உதவித்தலைவராக க.ப.சுப்பையாவும் மத்திய செயலவைக்கு சந்திரகுமாரும் தலைவர் தமிழ்மணியால் நியமிக்கப்பட்டார்கள்.

செயலாளர் விந்தைக்குமரனால் வழிநடத்தப்பட்ட இக்கூட்டத்தில் இயக்க நல்லுரையாளர் கொள்கைக்கனல்- கெ.வாசு வாழ்த்துரை வழங்கினார். நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்திய சமூகத்தின் பொருளாதார இலக்கு குறித்து விரிவாக விவரிக்கப்பட்டது.

பத்துகேவ்ஸ், தாமான் ஸ்ரீ கோம்பாக் ராயன் உணவகத்தில் நடைபெற்ற 14- ஆம் ஆண்டுக் கூட்டம், பெ.கோவிந்தசாமியின் நன்றியுரையுடன் நிறைவைப் பெற்றது.

WATCH OUR LATEST NEWS