காப்புறுதி முகவர் ராஜசேகரனுக்கு மரணம் விளைவித்தல் – பெண் உட்பட நால்வருக்கு தலா 10 ஆண்டு சிறை

சிரம்பான், ஏப்ரல்.29-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சிரம்பான் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காப்புறுதி முகவர் கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உட்பட 4 இந்தியர்களுக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் கொலைக் குற்றத்திற்கான குற்றவியல் சட்டம் 302 பிரிவிலிருந்து அந்த நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டு, நோக்கமில்லாக் கொலையாக மாற்றப்பட்டது.

நோக்கமில்லா கொலைக் குற்றச்சாட்டை அந்த நால்வரும் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

55 வயது எஸ். ஜீவா, 39 வயது எம். ராஜா, 29 வயது P. யோகன் பிள்ளை மற்றும் ஒரு பெண்மணியான 43 வயது எம். பிரேமிளா ஆகிய நால்வரே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

நீதிபதி ரோஹானி இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நால்வரும் தங்களுக்கு எதிரான நோக்கமில்லாக் கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர்.

சிரம்பானில் காப்புறுதித் துறையில் நிர்வாகி பதவி வரை உயர்ந்த காப்புறுதி முகவரான 52 வயது P. ராஜசேகரனைக் கொலை செய்ததாக இந்த நால்வரும் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி முன்னணி காப்புறுதி நிறுவனமான மெனாரா ஸூரிக் கட்டத்தில் பத்தாவது மாடியில் இந்த நால்வரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ராஜசேகரன் கடத்தப்பட்ட நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு இருந்த நிலையில், 30 நாட்களுக்கு பிறகு ராஜசேகரனின் அழுகிய சடலம் பந்திங், தஞ்சோங் செப்பாட்டில் உள்ள ஒரு புதரில் கண்டு பிடிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS