பிகேஆர் தேர்தலில் பேராளர்களை அச்சுறுத்துவதா? உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினரின் கைத்துப்பாக்கி பறிக்கப்பட்டது

ஈப்போ, ஏப்ரல்.29-

பிகேஆர் கட்சியின் பேரா, உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராபாஃட் வாரிசாய் முகமட்டின் கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி தொகுதி அளவில் நடைபெற்ற பிகேஆர் தேர்தலில் தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியைப் பொதுவில் காட்டி மக்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த சட்டமன்ற உறுப்பினரின் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

போலீஸ் அனுமதிப் பெற்று, கைத்துப்பாக்கி வைத்திருக்கும் எந்தவொரு தனிநபரும், இது போன்ற விசாரணைக்கு ஆளாகுவார்களேயானால் எஸ்ஓபி நடைமுறைக்கு ஏற்ப அவர்களின் கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்வது வழக்கமான நடைமுறையாகும் என்று நோர் ஹிசாம் குறிப்பிட்டார்.

இந்நிலையில் உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியை ரத்து செய்யும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கைக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதுடன், அவரின் கைத்துப்பாக்கி உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று நோர் ஹிசாம் தெரிவித்தார்.

இன்று ஈப்போவில், பேரா மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நோர் ஹிசாம் இதனைக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS