மலாய்க்காரர்கள் எப்போது ஒன்றுப்படுவார்கள்? ஒரு பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் போதுதான் – துன் மகாதீர் கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப்ரல்.30

இந்நாட்டில் உள்ள மலாய்க்காரர்கள், ஒரு பொதுவான அச்சுறுத்தலை அல்லது மிரட்டலை எதிர்கொள்ளும் போது மட்டுமே அவர்கள் ஒன்றுப்படுவார்கள் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

மலாய்க்காரர்கள் ஒரு கடுமையான எதிர்ப்பை, எதிர்கொள்ளும் போது, அந்த எதிர்ப்பைச் சமாளிக்கவும், அதனை முறியடிக்கவும் ஒரு பொதுவான குறிக்கோளுக்காக அவர்கள் எவ்வாறு அணி திரண்டு, ஒன்றுப்பட்டு நின்றனர் என்பதற்குக் கடந்த கால வரலாறு ஓர் உதாரணமாகும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

மலாய்க்காரர்கள் முன்பு, ஒன்றுபடவில்லை என்றும், தனித்தனியாக ஆட்சி செலுத்தப்பட்ட பல சிறிய மற்றும் சுயேட்சை அரசுகளை நிறுவியதாகவும் துன் மகாதீர் விவரித்தார்.

வரலாற்று ரீதியாக மலாய் பிரதேசங்கள் இருந்த போதிலும், ஆங்கிலேயர்கள் நான்கு மலாய் மாநிலங்களைத் தாய்லாந்திடம் ஒப்படைத்த போது, அவர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

1909 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பேங்காக்கிற்கு கொடுக்கப்பட்ட தற்போது தாய்லாந்தின் ஒரு பகுதியாக விளங்கும் பட்டாணி, சிங்கோராம் மெனாரா மற்றும் யாலா ஆகிய மலாய் மாநிலங்கள் எவ்வாறு அந்நியர்களிடம் இழந்தோம் என்பதையும் துன் மகாதீர் விவரித்தார்.

பின்னர் அனைத்து மலாய் மாநிலங்களையும் கைப்பற்றி, மலாய் ஒன்றியத்தை உருவாக்க ஆங்கிலேயர்கள் முன்மொழிந்த போதுதான், மலாய்க்காரர்கள் மத்தியில் ஒரு பொதுவான அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் ஏற்பட்டது.

நிலைமை நீடித்தால் பிரிட்ஷாரின் ஆதிக்கம் தொடரும் என்று மலாய்க்காரர்கள் மத்தியில் அச்சம் நிலவியது. அப்போதுதான் மலாய்க்காரர்கள், தாங்கள் ஒன்றுப்படுவது மூலமே இந்த அச்சுறுத்தலை முறியடிக்க முடியும் என்று நம்பி, அனைவரும் ஒன்றுப்பட்ட நிலையில் அதற்கான வழிமுறைகளைத் தேடினர்.

எனவே தற்போது மலாய்க்கார்கள் பல்வேறு பிரிவுகளாப் பிளவுப்பட்டு இருந்தாலும் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் போது அவர்கள் நிச்சயம் ஒன்றுப்பட சாத்தியம் உண்டு என்று 22 ஆண்டு காலம் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்ற துன் மகாதீர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS