அலோர் காஜா, 03-
வாடிக்கையாளர் ஒருவரின் அழைப்பைப் பெற்று, அவர் கேட்ட பொருளை ஒப்படைப்பதற்காக காரில் சென்ற கணவனும், மனைவியும் மர்மப் பாதையில் சிக்கி, பெரும் பீதியில் மூழ்கிய சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொருட்களை வாங்குவதற்கு முன்னுறுதிச் செய்யப்பட்டு, கொடுக்கப்பட்ட முகவரி, உண்மையிலேயே வாடிக்கையாளருடையதா அல்லது வேறு ஏதாவது எதிர்மறையான சக்தியா என்பது குறித்து மலாக்காவைச் சேர்ந்த அந்த தம்பதியர் பதற்றதில் உள்ளனர்.
29 மற்றும் 30 வயதுடையை அந்த தம்பதியர், கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் கூகுள் மேப்பைப் பயன்படுத்தி, கொடுக்கப்பட்ட முகவரிக்கு ஏற்ப மலாக்கா, ஆ போஃமோசா ரெசோர்ட்டிற்கு அருகில் கம்போங் உலு பெகோ பகுதிக்குச் சென்றுக் கொண்டிருந்தனர்.
வாகனம் செல்ல, செல்ல மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத நிலையில் ஒரு பழைய பாலத்துக்கு அடியில் வாகனத்தைக் கொண்டு நிறுத்திய போது, தொடர்ந்து செல்வதற்கு வழியில்லாமல், அது ஜாலான் மத்தி என்பதை அப்போதுதான் தாங்கள் உணர்ந்ததாக அந்தத் தம்பதியர் குறிப்பிட்டனர்.
கும்மி இருட்டு சூழ்ந்த நிலையில் அந்த பாதையிலிருந்து விடுபடுவதற்குத் தங்கள் காரைத் திருப்பிய போது, காரின் ஒரு பகுதி திடீரென்று புதையுண்டது அந்த தம்பதியரை அதிர்ச்சியிலும், பயத்திலும் ஆழ்த்தியது.
கணவனும், மனைவியும் நடுக்காட்டில் கொண்டு வந்து விட்டதைப் போன்று உணர்ந்த நிலையில் பின்னர் உதவிக் கோரி தீயணைப்பு மீட்புப் படையினருக்குத் தொடர்பு கொண்டு, தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இரவு மணி 8 மணிக்கு தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் அந்த தம்பதியர் பயத்தினால் நடுங்கிக் கொண்டு இருந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டனர்.
அந்த தம்பதியரின் பெரோடுவா கெலிசா கார் சுமார் 15 செண்டிமீட்டர் ஆழத்தில் டயர் புதையுண்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அலோர் காஜா தீயணைப்பு, மீட்பு நிலைய செயலாக்க அதிகாரி முகமட் நூர் பௌஃஸால் சம்சுனாஹார் தெரித்தார்.
பின்னர் அந்த தம்பதியர் கார் மீட்கப்பட்டு, அவ்விரு தம்பதியரும் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து அழைத்து வரப்பட்டதாக. முகமட் நூர் குறிப்பிட்டுள்ளார்.