மலேசியாவை மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காதீர் என்று மலாய்க்காரப் பிள்ளைகளுக்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது அறிவுறுத்தியுள்ளார்.
மலேசியாவை மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிப்பதற்கு முன்னதாக அது குறித்து மிக கவனமாகவும், ஆழமாகவும் சிந்திக்க வேண்டும் என்று மலாய்க்காரப் பிள்ளைகளுக்கு துன் மகாதீர் வலியுறுத்தினார்.
நம்மைப் போலவே பிற இனத்தவர்களும் இந்த நாட்டை ஆழ்வதற்கு உரிமைப் பெற்றுள்ளனர் என்று பெரும்பாலான மலாய்க்காரப் பிள்ளைகள் கருத்து கொண்டிருந்தாலும், அப்படியொரு சூழ்நிலை ஏற்படுவதை அனுமதிப்பதற்கு முன்னர் நமது பிள்ளைகளும் அது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று துன் மகாதீர் கேட்டுக் கொண்டார்
பிற இனத்தவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுப்தற்கு முன்னதாக நாட்டின் சமூகவியல் யதார்த்தங்கள் மற்றும் வரலாற்றை நமது மலாய்க்காரப் பிள்ளைகள் பின்னோக்கி பார்க்க வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.
மலாய்க்காரர்கள் அல்லாதவர்களில் பெரும்பாலோர், நம்மைப் போல இந்த நாட்டின் குடிமக்களாக முழுமையாக நடந்து கொள்வதில்லை. அவர்கள் தங்கள் பூர்வீக நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் மொழி, கலாச்சாரம், பள்ளிப்படிப்பு மற்றும் அரசியல் கட்சிகள் கூட அவர்களின் சொந்த நாட்டோடு இணைக்கப்பட்டுள்ளன என்று டாக்டர் துன் மகாதீர் இன்று தனது அறிக்கையில் கூறினார்.
இத்தகைய அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் பிற இனத்தவர்களின் செயல்பாடு, மலாய்க்கார்களுக்கு முரணானதாகும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.