சிரம்பான், மே.03-
நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம், கிக் பொருளாதாரத் துறையில் உள்ள தொழிலாளர்களைப் பாதுகாக்க, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் திட்டம் ஒன்றை அமல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டமானது, பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், விழிப்புணர்வு திட்டங்கள், தள விதிமுறைகளை அமல்படுத்துதல், பயிற்சி மற்றும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கின்றது என்று நெகிரி செம்பிலான் மாநில தொழில்முனைவோர், மனித வளம், பருவ நிலை மாற்றம், கூட்டுறவு, பயனீட்டாளர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து சுயதொழில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 200 க்கு மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் தங்களைச் சந்தாதாரர்களாகப் பதிவு செய்து கொண்டுள்ளனர் என்று வீரப்பன் குறிப்பிட்டார்.
கிக் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், முறையான வேலை இணையாக கிக் தொழில் துறையை மேம்படுத்தவும், நெகிரி செம்பிலான் மாநில அரசு உறுதி பூண்டுள்ளதாக வீரப்பன் தெரிவித்தார்.
அதே வேளையில் கிக் தொழிலாளர்களின் பணித் தன்மையை உள்ளடக்கிய மற்றும் அவர்களின் நிலையான எதிர்காலத்தை நோக்கி, விரிவான பாதுகாப்பை வழங்குவதற்கான முயற்சியையும் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று வீரப்பன் குறிப்பிட்டார்.
கடந்த மே முதல் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட தொழிலார் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் வீரப்பன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.