சீன சமூகத்தின் ஆதரவை மசீச இழந்ததற்கு அம்னோவே காரணமாகும் – முன்னாள் தலைவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே.03-

சீன சமூகத்தின் ஏகபோக அரசியல் கட்சியாக விளங்கிய மசீச கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக சீன சமூகத்தின் ஆதரவை இழந்ததற்கு அம்னோவே காரணமாகும் என்று அதன் முன்னாள் தலைவர் ஒருவர் இன்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் அம்னோ மாநாடுகளில் பிற இனத்தவர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கைகள், சீன சமூகத்தின் ஆதரவு குறையத் தொடங்கியது. அதே வேளையில் கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2007 ஆம் ஆண்டு அம்னோ மாநாடுகளில் பிற இனத்தவர்களை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் அதன் தலைவர்கள், கெரிஸ் கத்தியை ஏந்தி, விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டல்கள் நிலைமையை மோசமாக்கியதாக மசீச.வின் முன்னாள் உதவித் தலைவர் தீ லியான் கேர் தெரிவித்தார்.

அம்னோ மாநாடுகளில் விடுக்கப்பட்ட இது போன்ற எச்சரிக்கைகள், இந்த நாட்டில் உள்ள சீன சமூகத்திற்குப் பொருத்தமானது அல்ல.

அம்னோ மாநாடுகளில் பேராளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அதன் தலைவர்கள் ஒவ்வொரு முறையும் பிற இனங்களைச் சீண்டிப் பார்க்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் சீன சமூகத்தினர் எரிச்சல் அடைந்தனர்.

செமங்காட் 46 கட்சியை தெங்கு ரசாலி ஹம்சா தொடங்கிய போது, அன்றைய பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்கவும், அதன் பின்னர் டத்தோஸ்ரீ அகமட் அப்துல்லா அகமட் படாவியின் தலைமைத்துவத்தை ஆதரிக்கவும் சீன சமூகத்தை மசீச வற்புறுத்தியது.

இதன் காரணமாகவே மசீச.விற்கு எதிராகவே சீன சமூகத்தினர் திரும்பினர். இதனால், பாரிசான் நேஷனலில் அம்னோவுடன் இருந்த மசீச.வும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இன்று தனது அடையாளத்தை இழந்து, அன்றாகக் காட்சியாக மாறிவிட்டது என்று முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சரான தீ லியான் கேர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS