ஆர்.டி.எம் தொலைக்காட்சி செய்தி வாசிப்புக்கு விடை கொடுக்கிறார் சந்திரகலா ஐயப்பன்

கோலாலம்பூர், மே.03-

14 வருட தொலைக்காட்சி பயணத்தை முடித்துக் கொள்ளும் தருணம் வந்துவிட்டதாகவும் தொலைக்காட்சி தமிழ்ச் செய்தியில் இருந்து மனமகிழ்வோடும் திருப்தியோடும் விடை பெறுவதாகவும் சந்திரகலா ஐயப்பன் தெரிவித்துள்ளார். அவருக்கு இலக்கவியல் அமைச்சில் உயர் அதிகாரியாய் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துறையில் ஆய்வுகளை உட்படுத்தும் உயர்கல்வியைத் தொடர வேண்டிய நிலையில், ஆர்.டி எம் தமிழ் செய்தி வாசிப்பிலிருந்து தாம் விலகுவதாகவும் தமிழில் கோலோச்ச எண்ணும் இளம் தலைமுறையினருக்கு வழிவிடுவதாகவும் சந்திரகலா குறிப்பிட்டுள்ளார். 

பிரதமரின் அங்கீகாரம், சமுதாயத் தலைவர்களின் அங்கீகாரம், தமிழ்க்கூறு நல்லுலகத் தலைவர்களின் அங்கீகாரம், வெளிநாட்டு அமைச்சர்களோடுகூட்டு ஒத்துழைப்பும் அங்கீகாரமும், உலகத் தர மாநாடுகளில் பங்குகொள்ளும் வாய்ப்புகளும், உலகத் தமிழ்ச் சான்றோரின் ஆசிர்வாதம் என்று மட்டும் அல்லாமல்,மலாய் வானொலி அறிவிப்பாளர், மலாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நேரலை அறிவிப்பாளர், மலாய் அறிவிப்பாளர் ஆகிய வாய்ப்புகளின் வழி, பிற இன நட்புகளையும் ஆர்.டி.எம் ஈட்டித் தந்துள்ளதாக அவர் நினைவு கூர்ந்தார்.

தம்மை அன்போடு செதுக்கி, தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய அன்பு ஆர்.டி.எம்முக்கு சந்திரகலா தமது நன்றியைப் பதிவு செய்தார். அன்பையும் தன்னம்பிக்கையையும் அமுத சுரபிபோல் தந்த தமிழ்ச் சான்றோர்களுக்கும்,சமுதாயத் தலைவர்களுக்கும், அன்பு நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் சந்திரகலா தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 

WATCH OUR LATEST NEWS