கோலாலம்பூர், மே.04-
ஊடகத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க என்யுஜே எனப்படும் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தைச் சந்திக்க தகவல் தொடர்பு அமைச்சு தயாராக உள்ளது என்று அமைச்சர் பாஃமி பாஃட்சீல் கூறினார். தவறானத் தகவல்களையும் போலியானச் செய்திகளையும் பரப்புவதில் ஏஐ தவறாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்து, ஊடகங்கள் ஏஐயிலிருந்து பயனடைய வேண்டுமென்றால் தெளிவான வழிகாட்டுதல்களும் சிறந்த புரிதலும் அவசியம் என்று பாஃமி தெரிவித்தார்.
என்யுஜே, ஊடக நிகராளிகள், அரசு சாரா நிறுவனங்கள், பத்திரிகையாளர் சங்கங்கள் ஆகியவற்றுடன் ஆழமான விவாதத்திற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், இந்த வாரம் என்யுஜேவைச் சந்திக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். ஊடகத் தனியுரிமை குறியீட்டில் மலேசியாவின் தரவரிசை மேம்பட்டிருந்தாலும், ஊடகத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், பத்திரிகை தனியுரிமைக்கும் பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் தவறானத் தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் இடையே அரசாங்கம் சமநிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.