புத்ராஜெயா, மே.06-
தனியார் கிளினிக்குகளிலும், மருத்துவமனைகளிலும் மருந்துப் பொருட்களின் விலைப் பட்டியலைப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கும் அளவிற்கு நாங்கள் மளிகைக் கடை சில்லறை வியாபாரிகள் அல்ல என்று மலேசிய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.
நாங்கள் மருத்துவத் தொழில் ரீதியாக நிபுணத்துவம் பெற்றவர்கள். மளிகைக் கடையில் ஒவ்வொரு பொருளுக்கும் விலைப் பட்டியலை வைத்திருக்கும் சில்லறை வியாபாரிகளைப் போல் அரசாங்கம் எங்களை வழிநடத்தக்கூடாது என்று மலேசிய மருத்துவச் சங்கமான எம்எம்ஏவின் பிரதிநிதி டத்தோ டாக்டர் ஆர். திருநாவுக்கரசு தெரிவித்தார்.
தனியார் கிளிளிக்கும், மருத்துவமனைகளிலும் கடந்த மே ஒன்றாம் தேதி முதல் தங்கள் மருந்துப் பொருட்களின் விலையை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று அரசாங்கம் அமல்படுத்தியுள்ள புதிய விதிமுறையை மருத்துவர்கள் எதிர்த்து வருகின்றனர்.
இன்று காலையில் புத்ராஜெயாவில் பிரதமர் அலுலகத்தின் முன் ஆட்சேப மறியலில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்களின் நடவடிக்கை தொடர்பில் டாக்டர் திருநாவுக்கரசு எதிர்வினையாற்றினார்.
தனியார் கிளினிக்குகளிலும் மருத்துவமனைகளிலும் மருந்துப் பொருட்களின் விலை பன்மடங்காக உயர்ந்திருப்பது, வசதி குறைந்த மக்களைச் சிரமத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரே வகையான மருந்து ஒரு கிளினிக்கில் 56 ரிங்கிட்டிற்கும், மற்றொரு கிளினிக்கில் 92 ரிங்கிட்டிற்கும் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
மருந்துப் பொருட்களைக் காட்சிக்கு வைப்பதில் தனியார் கிளினிக்குகளுக்கு அப்படியென்ன பிரச்னை ஏற்பட்டு விடப் போகிறது என்ற வாதத்தை ஏற்க மருத்துவர் சங்கம் மறுத்து வருகிறது.
எங்களைச் சில்லறை வியாபாரிகள் போல் நடத்த வேண்டாம் என்று அந்தச் சங்கம் இன்று அறிவுறுத்தியுள்ளது.