கோலாலம்பூர், மே.06-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் புலன் விசாரணைக்கு உதவும் வகையில் சாட்சியம் அளிக்கச் சென்ற ஒரு வர்த்தகப் பெண்மணியான 42 வயது டத்தின் ஶ்ரீ பமேலா லிங் மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பில் சில தனி நபர்கள் விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
விசாரணை செய்யப்பட்டு வருகின்றவர்களில் பமேலா லிங்கின் கணவரும் அடங்குவர் என்று ஐஜிபி குறிப்பிட்டார். அந்தப் பெண்மணி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் அவரின் கணவர் சம்பந்தப்பட்டுள்ளரா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
கணவரைத் தவிர்த்து, இன்னும் விசாரணை செய்யப்பட வேண்டிய சில நபர்களை போலீசார் அடையாளம் கண்டு இருப்பதாகவும் டான் ஶ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.
சட்ட விரோதப் பணப்ப பரிமாற்றம் தொடர்பாக எஸ்பிஆர்எம்மின் புலன் விசாரணைக்காக புத்ராஜெயாவிற்குச் சென்று கொண்டிருந்த போது அந்த வர்த்தகப் பெண்மணி மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
அந்த வர்த்தகப் பெண்மணியை ஏற்றிச் சென்ற, இ-ஹெய்லிங் ஓட்டுநர் அளித்துள்ள போலீஸ் புகாரின்படி, எஸ்பிஆர்எம் தலைமையகத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் போலீஸ் சீருடையில் காணப்பட்ட ஒரு நபரும், ஒரு பெண்ணும் காரை மடக்கியதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
பின்னர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக மற்றொரு காரில் ஏற்றிக் கொண்டு அவர்கள் சென்று விட்டதாக அந்த கார் ஓட்டுநர் சாட்சியம் அளித்துள்ளார்.
கடத்தல்காரர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண் போலியானது என்பதை புக்கிட் அமான் கண்டுபிடித்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் காணாமல் போனது தொடர்பில் அந்தப் பெண்ணின் கணவர் உட்பட இதுவரை 16 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக ஐஜிபி தெரிவித்துள்ளார்.