பெட்டாலிங் ஜெயா, மே.08-
சிகிச்சைக்கான மருந்துப் பொருட்களின் விலைப் பட்டியலைப் பொது மக்களின் பார்வைக்கு வைக்க முடியாது என்று பிடிவாதமாக இருந்து வரும் தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவர்களின் கருத்துக்கு உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருட்களின் விலைப் பட்டியலைப் பொது மக்களின் பார்வைக்கு வைப்பதற்குத் தாங்கள் மளிகைக் கடை நடத்தி வரும் சில்லறை வியாபாரிகள் அல்ல என்று மலேசிய மருத்துவச் சங்கம் நேற்று முன்தினம் அளித்த பதில் மிகக் கடுமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தாங்கள் தொழில் ரீதியில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களே தவிர மளிகைக் கடை நடத்தி வரும் சில்லறை வியாபாரிகள் அல்ல என்று மருத்துவச் சங்கம் கூறும் வாதம் ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி குறிப்பிட்டார்.
மருந்துப் பொருளாக இருந்தாலும்கூட அந்தப் பொருளை வாங்குவதற்கும், அதன் விலையைக் கேட்டறிவதற்கும் மலேசியாவில் உள்ள ஒவ்வொரு பயனீட்டாளரும் உரிமைப் பெற்றுள்ளனர். அவர்கள் சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றனர்.
மருந்துப் பொருட்களை மருத்துவர்கள் விற்றாலும், மளிகைச் சாமான்களை சில்லறை வியாபாரிகள் விற்றாலும் பயனீட்டாளர் உரிமை விவகாரத்தில் இரண்டுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இதுதான் யதார்த்தம் என்று அமைச்சர் விளக்கினார்.
மருந்துப் பொருட்களின் விலையைக் கண்டறிவதற்கும், அது குறித்த தகவலைத் தெரிந்துக் கொள்வதற்கும் பயனீட்டாளர்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதிலும், உறுதிச் செய்வதிலும் அரசாங்கத்திறற்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது என்று அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி தெளிவுபடுத்தினார்.