பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் இராமசாமிக்கு எதிராக 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்கள்

பட்டர்வொர்த், மே.14-

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்குச் சொந்தமான நிதியை நம்பிக்கை மோசடி செய்ததாக மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமிக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இன்று காலையில் பினாங்கு, பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஸுல்ஹாஸ்மி அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்ட 76 வயதுடைய இராமசாமி, தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளையும் மறுத்து, விசாரணை கோரியுள்ளார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக டாக்டர் இராமசாமி பதவி வகித்த போது, அவரால் முதல் முறையாக தைப்பூச விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தங்க இரதத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட தங்க இரதம் கொள்முதல் மற்றும் அறப்பணி வாரியத்திற்குச் சொந்தமான பணத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கியது மற்றும் மருத்துவ நிதி தொடர்பில் மொத்தம் 8 லட்சம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு, அந்த முன்னாள் பேராசிரியருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தங்க இரதம் கொள்முதல் மற்றும் கல்வி உபகாரச் சம்பளம், மருத்துவ நிதி ஆகிய விவகாரத்தில் தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, அறப்பணி வாரியத்திற்குச் சொந்தமானப் பணத்தை மோசடி செய்துள்ளதாக டாக்டர் இராமசாமி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்த டாக்டர் இராமசாமி, 2019 ஆம் ஆண்டு மே மாதத்திற்கும், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர்கள் குழுவின் அனுமதி பெறாமலேயே மேற்கண்ட நிதியைத் தன்னிச்சையாக அங்கீரித்து, அறப்பணி வாரியத்தின் பணத்தை நம்பிக்கை மோசடி செய்துள்ளார் என்று டாக்டர் இராமசாமிக்கு எதிரான குற்றச்சாட்டில் விவரிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 409 ஆவது பிரிவின் கீழ் இராமசாமிக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இக்குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS