தெலுக் இந்தான், மே.14-
தெலுக் இந்தானில் நேற்று காலையில் நிகழ்ந்த விபத்தில் கலகத் தடுப்புப் படையைச் சேர்ந்த ஒன்பது போலீஸ்காரர்கள் உயிரிழந்த கோர விபத்திற்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் கற்களை ஏற்றி வந்த லோரி ஓட்டுநர், விசாரணைக்கு ஏதுவாக 4 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலையில் தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த லோரி ஓட்டுநர், மாஜிஸ்திரேட் நைடாதுல் அதீரா அஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீஸ் துறை பெற்றுள்ளது.
45 வயதுடைய அந்தச் சந்தேகப் பேர்வழி, 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநர், கற்பழிப்பு, போதைப் பொருள், திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே 6 குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை நேற்று தெரிவித்து இருந்தார்.