புத்ராஜெயா, மே.14
முன்னாள் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் கேவின் மொராயிஸ் கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் உட்பட அறுவர் செய்து கொண்ட மேல்முறையீட்டில் புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம், இன்று தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
கூட்டரசு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் தீர்ப்பு அளிப்பதற்கு தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவை என்றார். தீர்ப்பின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இன்று வழக்கு விசாரணையை முடித்துக் கொண்ட போது தெங்கு மைமூன் இதனைத் தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கேவின் மொராயிஸ் கொலை வழக்கில் மரணத் தண்டனை அளித்துள்ள ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிச் செய்து இருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அறுவர் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கோலாலம்பூர், வங்சா மாஜு இராணுவ மருத்துவமனையின் நோயியல் நிபுணர் 62 வயது டாக்டர் ஆர். குணசேகரன், வட்டித் தொழில் நடத்திய 54 வயது எஸ். ரவிச்சந்திரன், 33 வயது ஆர். தினேஸ்வரன், 32 வயது ஏ.கே. தினேஷ் குமார், 35 வயது எம். விஸ்வநாத் மற்றும் 32 வயது எஸ்.நிமலன் ஆகிய ஆறு பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.