பட்டர்வொர்த், மே.14-
17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, 78 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு எதிரான 17 குற்றச்சாட்டுகளையும் மறுத்து இராமசாமி விசாரணை கோரியிருப்பதால், அவரை 78 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸுல்ஹாஸ்மி அப்துல்லா அனுமதி அளித்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்று முடியும் வரை இராமசாமி, தனது அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இராமசாமி சார்பில் வழக்கறிஞர்கள் ஷாம்சேர் சிங் தின், எங் யூ பெய் மற்றும் அர்ச்சனா சந்திரசேகரன் ஆகியோர் ஆஜராகினர். பிராசிகியூஷன் தரப்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நூர் அஸூரா சுல்கிப்ளி மற்றும் நுர்னானாஜிமதுல் இடாயு அஸுயார் ஆகியோர் ஆஜராகினர்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக இருந்த போது, வாரியத்திற்குச் சொந்தமான எட்டு லட்சம் ரிங்கிட் தொடர்பான நிதியை நம்பிக்கை மோசடி செய்ததாக 76 வயது இராமசாமிக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணை ஜுலை 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.