புத்ராஜெயா, மே.14-
ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறும் போது, மாணவர்கள் பள்ளிக்கு வராமல், வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தலை மேற்கொள்ளும் பிடிபிஆர் கல்வி முறை குறித்து கல்வி அமைச்சு அறிவிக்கும் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சு, விரைவில் சுற்றறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசியான் உச்சநிலை மாநாடு வரும் மே 26 முதல் 27 ஆம் தேதி வரை இரண்டு தினங்களுக்கு கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டின் போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக பிடிபிஆர் கல்வி முறைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக டத்தோ பாஃமி தெரிவித்தார்.
ஆசியான் மாநாடு நடைபெறும் இடங்களில் உள்ள அரசாங்க அலுவலகங்களில் பணி புரிகின்றவர்கள், வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கடந்த வாரம் பொதுச் சேவை இலாகா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு இருப்பதையும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ பாஃமி சுட்டிக் காட்டினார்.
அதே நேரத்தில், தனியார் நிறுவனங்கள், குறிப்பாக கோலாலம்பூர் நகர மையத்தில் இதே போன்ற நடவடிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.