குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஜார்ஜ்டவுன், மே.15-

பினாங்கு, பாயான் லெப்பாஸ், ஜாலான் லிந்தாங் புக்கிட் ஜம்புலில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அச்சம்பவம் இன்று காலை 4.05 மணியளவில் நிகழ்ந்தது. பிஎம்டபள்யு காரொன்று சந்தேகப்படும்படியாகக் காணப்பட்டதை அடுத்து கடமையில் ஈடுபட்டிருந்த மாநில குற்றப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த போலீஸ் குழுவினர், அக்காரை அணுகினர். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த சமயம், அக்காரில் இருந்து வெளியேறிய ஆடவர் ஒருவர் திடீரென போலீஸ் வாகனத்தை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

அதனைச் சற்றும் எதிர்பாராத போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்ள பதிலுக்குச் சுட்டத்தில் 35 வயதான அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது காரைச் சோதனையிட்டதில் துப்பாக்கி, இரும்பு, கட்டை, பாராங் கத்தி, போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவத்தில் பலியான நபர், வழிபறிக் கொள்ளை, வீடு புகுந்து திருடியது, போதைப்பொருள் நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பில் 34 குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்தவர் என்பதும் தெரிய வந்தது.

WATCH OUR LATEST NEWS