கோலாலம்பூர், மே.15-
புத்ராஜெயாவில் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகப் பெண்மணியான டத்தின் ஶ்ரீ பமேலா லிங்கின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் இன்று அதிகாலை தலைநகரில் கைது செய்யப்பட்டதை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா உறுதிச் செய்தார். அவரை விசாரணைக்காகத் தடுத்து வைக்க புத்ராஜெயா நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில், அது தள்ளுபடி செய்யப்பட்டதாக டத்தோ ருஸ்டி தெரிவித்தார்.
அந்த ஆடவர் தற்போதைக்கு போலீஸ் காவலில் உள்ளதாகவும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பமேலா காணாமல் போனதில் அவரது கணவருக்குச் சம்பந்தம் இருக்கலாம் என்றும் அந்த கோணத்தில் விசாரிக்கப்படுவதாகவும் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் கடந்த மாதம் கூறியிருந்தார்.
ஏப்ரல் 9 ஆம் தேதி இ-ஹெய்லிங் காரில் எஸ்பிஆர்எம் அலுவகத்திற்குச் செல்லும் வழியில் 52 வயது பமேலா காணாமல் போனார்.