உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24ஆம் தேதி நடைபெறும் என்றும், டிரைலர் ரிலீஸ் தேதி மே 17 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், எந்தெந்த நகரங்களில் எந்தெந்த தேதிகளில் விளம்பரப் பணிகள் தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் கதைச் சுருக்கம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சக்திவேல் நாயக்கரை இந்த படத்தின் கதை பின் தொடர்வதாகவும், அவர் ஒரு பிரபலமான செல்வாக்கு வாய்ந்த கேங்ஸ்டர் ஆக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவரது உலகம் வன்முறையாக இருக்கிறது. உலகளாவிய அண்டர் கிரவுண்ட் குழுக்களுடன் அவர் இணைந்திருக்கிறார் என்று தெரிகிறது.
மேலும், அவர் தனது மகனையும் உடன் வைத்துக் கொண்டு செய்யும் செயல்கள் தான் இந்த படத்தின் கதை எனும் தகவலும் உள்ளது. ’நாயகன்’ படத்தில் சக்திவேல் நாயக்கர் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட நிலையில் ‘தக் லைஃப்’ படத்தில் அவர் மீண்டும் திரும்பி வருகிறார். அவரும் அவரது மகனும் பகைவர்களுக்கு எமனாக மாறி, அதிரடி செயல்களைச் செய்யத் தொடங்குகிறார்கள். இதுதான் இந்த படத்தின் முக்கியக் கதைக்களம் என்று கூறப்படுகிறது.
இதனை வைத்து பார்க்கும்போது, ’நாயகன்’ படத்தின் தொடர்ச்சி தான் இந்த படத்தின் கதையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இருப்பினும் ‘தக் லைஃப்’ வெளிவந்த பின்னரே அது உறுதியாகும்.