விமான நிலையத்தில் இரண்டு வியட்நாம் பெண்கள் கைது

கோலாலம்பூர், மே.16-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் டெர்மினல் 2 இல் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட இரண்டு வியட்நாம் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

தங்களின் தாயகத்திற்குப் புறப்படுவதற்கு முன்னதாக, விமான நிலையத்தில் பய உணர்வு கவ்விக் கொண்ட நிலையில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்தப் பெண்களின் செயலை மிக ரகசியமாக நீண்ட நேரம் அணுக்கமாகக் கண்காணித்த மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த இரு பெண்களையும் தடுத்து நிறுத்தினர்.

அவர்களின் பயண ஆவணங்களைச் சோதனையிட்டதில், அவ்விருவரும் மலேசியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தை விட கூடுதல் காலத்திற்குச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது என்று அந்த ஏஜென்சி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை டெர்மினல் இரண்டில் இலக்குக்கு உரிய சுமார் 150 அந்நிய நாட்டவர்கள் கண்காணிக்கப்பட்டதில் அந்த இரு வியட்நாம் பெண்கள் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS