மாஸ்கோ, மே.16-
ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான Aeroflot (ஏரோபுஃலோட்) உட்பட ரஷ்ய விமான நிறுவனங்கள், கோலாலம்பூருக்கு மீண்டும் நேரடிச் சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
மலேசியா மற்றும் ஆசியான் மக்களுக்கு எது தேவையோ, அந்த வசதிகளை ஏற்படுத்தித் தரும் நிலையில் ரஷ்யாவிடம் இந்த வேண்டுகோளைத் தாம் முன்வைப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கும், கோலாலம்பூருக்கும் மீண்டும் விமானச் சேவைத் தொடங்கப்படுவதை மலேசியா விரும்புவதாக ரஷ்யாவிற்கு நான்கு நாள் அலுவல் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.
ஏரோபுஃலோட், ரஷ்யாவின் மிகப் பெரிய விமான நிறுவனக் குழுமமாகும். மாஸ்கோவிற்கு கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வாயிலாக விமானச் சேவையை மேற்கொண்டு வந்த ரஷ்யாவின் ஏரோபுஃலோட், கோலாலம்பூருக்கான தனது சேவையைக் கடந்த 2004 ஆம் ஆண்டில் நிறுத்தியது.