கோல நெருஸ், மே.18-
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, MySESMA எனப்படும் திரங்கானு, சுல்தான் மாஹ்மூட் அறிவியல் இடைநிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் அந்தப் பள்ளிக்கு 6 இலட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பேருந்தை அன்பளிப்பாக வழங்கியது. MySESMA 2023 பிப்ரவரியில் தொடங்கிய ‘Infak Tempat Duduk’ திட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட நன்கொடைகள் மூலம் இந்த பேருந்து வாங்கப்பட்டது என அச்சங்கத்தின் தலைவர் டத்தோ முகமட் ஸுபேர் எம்போங் தெரிவித்தார்.
முன்னாள் மாணவர்கள், அரசு நிறுவனங்கள், பொதுமக்கள் அளித்த நன்கொடைகள் மூலம் 22 மாதங்களில் சுமார் 2 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டது. இந்த புதிய பேருந்தும் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசலும் MySESMA சங்கத்தின் 2025 ஆசிரியர் தின சிறப்புப் பரிசுகளாகும். புதிய பள்ளிவாசல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முகமட் ஸூபேர் மேலும் கூறினார்.