3 லட்சம் இந்தோனேசியர்கள் மருத்துவப் பரிசோதனையையும் சிகிச்சையையும் பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது

மலாக்கா, மே.18-

இவ்வாண்டில் மலாக்காவில் உள்ள நான்கு தனியார் மருத்துவமனைகளில் சுமார் 3 இலட்சம் இந்தோனேசியர்கள் மருத்துவப் பரிசோதனையையும் சிகிச்சையையும் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மருத்துவச் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்தும் என மலாக்காவின் சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ங்வே ஹீ செம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, மலேசியாவில் மருத்துவ சிகிச்சையும் பரிசோதனையும் பெற்ற 8 இலட்சம் இந்தோனேசியர்களில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மலாக்காவைச் சேர்ந்தவர்கள். எனவே, இந்தோனேசியாவிலிருந்து, குறிப்பாக பெக்கான் பாருவில் இருந்து மருத்துவச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மாநிலத்தில் உள்ள நான்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

மலாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இந்தோனேசியர்களுக்கு விருப்பமானத் தேர்வாக உள்ளன. ஏனெனில் அங்கு வழங்கப்படும் சுகாதாரச் சேவைகளின் விலை இந்தோனேசியாவை விடக் குறைவு. மேலும் மலாக்கா சுமத்ராவுக்கு அருகில் அமைந்துள்ளது. பதிவுகளின்படி, பெரும்பாலான நோயாளிகள் பெங்காலிஸ், டுமாய் ஆகிய பகுதிகளிலிருந்து படகுச் சேவைகள் மூலம் வருகிறார்கள் என ங்வே ஹீ செம் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS