அம்பாங், மே.19
சிலாங்கூர், அம்பாங்கில் கோவில் ஒன்றின் சிலைகளை உடைத்துச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வெட்டுக்கத்தி, சுத்தியல் மற்றும் கிரிஸ் போன்ற ஆயுதங்களுடன் கோவில் வளாகத்திற்குள் நுழைந்த ஆடவர் ஒருவர், இந்த அராஜகத்தைப் புரிந்ததாக லோரி ஓட்டுநரான எஸ். மோகனா என்பவர் தனது புகாரில் குறிப்பிட்டார்.
ஆடவர் ஒருவர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதை அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் மூலம் தனது கைப்பேசிக்கு எச்சரிக்கை அழைப்பு வந்ததாக மோகனா குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாகக் கோவிலுக்குப் புறப்பட்டதாகவும், ஆலயத்தின் சிலைகளை அந்த நபர், ஆயுதத்தினால் அடித்துத் தகர்த்துவதைத் தடுத்து நிறுத்தத் தாம் முயற்சி செய்த போது, தனது தலையை வெட்டி விடுவதாக எச்சரிக்கை விடுத்ததாக அந்த லோரி ஓட்டுநர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஆலயச் சிலைகள் உடைப்பு தொடர்பில், ஆலயத்தின் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவரான மோகனா, இன்று திங்கட்கிழமை அம்பாங் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இந்தப் புகாரை அளித்துள்ளார்.