நாட்டின் முன்னணி வங்கியான சிஐஎம்பியின் செயலாக்கக் கண்காணிப்புக்கு அந்நிய நாட்டவர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பதை தேசிய வங்கி பணியாளர்கள் தொழிற்சங்கமாக NUBE கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
யுனைடெட் ஆசியன் பேங்க் மூலம் ஒருங்கிணைப்பின் வாயிலாக உயர்வு கண்ட சிஐஎம்பிக்குத் தலைமையேற்க மலேசியாவில் ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? என்று NUBE கேள்வி எழுப்பியுள்ளது.
நிறுவனம் ஒன்றின் வளர்ச்சிக்கு அந்நிய நாட்டவர்கள் மூலமே வளர முடியும் என்றால் அதன் வாடிக்கையாளர்கள் மட்டும் மலேசியர்களாக இருக்க வேண்டுமா? என்று அது வினவியது.
ஒரு வட நாட்டுக்காரரான அனிமேஷ் முகர்ஜி என்பவரைத் தனது நிறுவனத்திற்குத் தலைமையேற்கச் செய்தது மூலம் சிஐஎபி மலேசியாவின் கலாச்சாரத் தன்மைகளை உணரத் தவறிவிட்டதாக அந்த தொழிற்சங்கம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது.
சிஐஎம்பி என்பது ஒரு தனியார் நிறுவனம் அல்ல. நாட்டின் கருவூலமான கஸானா நேஷனலுடன் தொடர்புடைய அரசாங்கச் சார்பு நிறுவனமாகும்.
அரசாங்கச் சார்பு நிறுவனத்திற்கு ஓர் அந்நியர் தலைமையேற்க, சிஐஎம்பி வகை செய்துள்ளது என்றால் அரசாங்கம், எந்த அளவிற்கு மலேசியருக்கு முன்னுரிமையும், முக்கியத்துவத்தையும் அளித்து வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
சிஐஎம்பியில் பெருவாரியானப் பங்குகளை வைத்திருப்பது கஸானா நேஷனல் ஆகும். கஸானா நேஷனலுக்கு யார் தலைமையேற்று இருக்கிறார்?
பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தலைமையேற்று இருப்பதாக NUBE சுட்டிக் காட்டியுள்ளது.
மலேசியர்களின் கலாச்சாரத் தன்மை, பணியிடச் சூழல், செயல்பாடு, வாடிக்கையாளர்களுடன் கொண்டுள்ள புரிந்துணர்வு போன்ற எந்த கூறுகளிலும் பொருந்தி வராத ஒரு வட நாட்டுக்காரரை ஓர் அரசாங்க சார்பு நிறுவனத்தில் பிரதான பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு இருப்பது, மலேசியர்களை அவமதிப்பதாகும் என்று NUBE விளக்கியது.