புத்ராஜெயா, மே.19-
மலேசியாவிற்கு மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கும் பாக்கியம் கிட்டினால், இனம், மதம் மற்றும் அரச பரிபாலனம் சம்பந்தப்பட்ட 3ஆர் சட்டத்தை அகற்றப் போவதாக 100 வயது முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வரும் ஜுலை 10 ஆம் தேதி, 100 ஆவது அகவையைப் பூர்த்தி செய்யவிருக்கும் துன் மகாதீர், நாட்டிற்குத் தலைமையேற்ற கையுடன், தம்முடைய முதல் வேலை, 3ஆர் சட்டத்தை அகற்றுவதே தலையாயப் பணியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பிரதமராகப் பாக்கியத்தை மக்கள் மீண்டும் ஒரு முறை தமக்கு வழங்குவார்களேயானால், 3ஆர் அகற்றப்படுவது சாத்தியமே என்று புத்ராஜெயாவில் இன்று நூல் ஒன்றை வெளியீடு செய்தப் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தம்முடைய மனக் கண்ணால் பார்க்க முடியும் என்று குறிப்பிடும் துன் மகாதீர், 3ஆர் சட்டம் கொண்டு வரப்பட்டது மூலம் தங்களின் வாய் மூடப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
நாட்டிற்கு மீண்டும் தலைமையேற்கத் தமக்கு ஆர்வமில்லை என்றாலும், அப்படியொரு சூழல் ஏற்படுமானால் தம்முடைய பணித்தன்மை எவ்வாறு இருக்கும் என்பதை விவரிக்கவே 3ஆர் பற்றி பேசுவதாக துன் மகாதீர் தெரிவித்தார்.