அம்பாங், மே.19-
அம்பாங், தாமான் ஶ்ரீ அம்பாங்கில் உள்ள ஒரு கோவிலில் அத்துமீறி நுழைந்து, வெட்டுக் கத்தி, சுத்தியல் மற்றும் கிரீஸ் கத்தியைப் பயன்படுத்திச் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படும் ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமரா மூலம் தனது கைப்பேசியில் கண்டறிந்த 34 வயது கோவில் பொறுப்பாளர் ஒருவர், இது குறித்து புகார் அளித்து இருப்பதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
பிடிபட்ட நபரின் செயலைத் தடுக்க உடனடியாகக் கோவிலுக்குச் சென்ற அந்த நபரின் தலை வெட்டப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர் மிரட்டியதாகவும் ஏசிபி முகமட் அஸாம் குறிப்பிட்டார்.
தகவல் கிடைத்து, சம்பந்தப்பட்டக் கோவிலுக்குச் சென்ற போலீஸ் குழுவினர், அந்த நபரைக் கைது செய்ததுடன், கோவில் சிலைகளைச் சேதப்படுத்துவதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்து இருப்பதாக ஏசிபி முகமட் அஸாம் விளக்கினார்.
கைதான 33 வயதுடைய நபர் ஒரு போதைப் பித்தர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.