சுங்கை பட்டாணி, மே.20-
தனது முதலாளிக்குச் சொந்தமான வாகனத்தைத் திருடிக் கொண்டு தப்பிக்க முற்பட்ட ஆடவர் ஒருவர் லோரி மோதி, உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை, கெடா, ஜாலான் சுங்கை லாலாங் – புக்கிட் செலாம்பாவில் நிகழ்ந்தது. சுங்கை பட்டாணியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹான்யான் ரம்லான் தெரிவித்தார்.
அந்த நபர் லோரியில் மோதுவதற்கு முன்னதாக, முதலாளிக்குச் சொந்தமான பெரோடுவா வீவா ரகக் காரைத் திருடிக் கொண்டு தப்பித்த போது, அம்பாஙான் ஹைட்ஸ் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானார்.
அவரைக் காப்பாற்றுவதற்கு மக்கள் ஓடி வந்த போது, காரிலிருந்து வெளியேறிய அந்த நபர், பொது மக்களின் மோட்டார் சைக்கிளைத் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட போது, அவரை லோரி மோதியதாக ஏசிபி ஹான்யான் ரம்லான் குறிப்பிட்டார்.