கோலாலம்பூர், மே.20-
தேசிய ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரர் ங் ஸீ யோங் பூப்பந்து விளையாட்டில் மீண்டும் எழுச்சி பெற உறுதி பூண்டுள்ளார். அவர் நீண்ட காலமாக காயத்தால் அவதியுற்று வந்தார். இரு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள போதிலும், அவரது உடல்நிலை இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. எனவே பூப்பந்து விளையாட்டில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
காயம் காரணமாக ஓராண்டு வரை காத்திருந்து குணமடைந்த ஸீ யோங், கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசியப் பூப்பந்து வெற்றியாளர் உள்ளிட்ட பல போட்டிகளில் மீண்டும் பங்கேற்றார். அவ்வகையில் அவர் தைவான், தாய்லாந்து பொது பூப்பந்து போட்டிகளிலும் களமிறங்கினார். எனினும் அவர் அப்போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறினார்.
இருப்பினும் 25 வயதான ஸீ யோங், இன்னமும் நம்பிக்கையுடன் இருக்கிறார். தமது நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.