கோலாலம்பூர், மே.20-
நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்ததாக நம்பப்படும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 112 பேர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டனர்.
குடிநுழைவுத்துறை நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் அந்த 112 பேர், விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு, தங்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக மலேசிய எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியப் பின்னர், குடிநுழைவுத்துறைச் சோதனைக்கு உட்படாமல் விமான நிலையத்திற்குள்ளேயே சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் சுற்றித் திரிந்தது, ரகசிய கேமராவில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மலேசிய எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சியின் அமலாக்க அதிகாரிகள், விமான நிலையத்தில் சுற்றித் திரிந்த சுமார் 300 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை செய்ததில் இந்த 112 பேர் பிடிபட்டதாக அந்த இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.