கோலாலம்பூர், மே.20-
மலேசியக் கல்வி அமைச்சு, தேசிய புத்தகக் கழகம் வழியாக, ஆறு மலேசியப் புத்தகத் தொழில் சங்கங்களுடன் இணைந்து கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சியை எதிர்வரும் 23 மே முதல் 1 ஜூன் வரை ஏற்பாடு செய்கிறது. 42 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் நாட்டின் முன்னணி புத்தக நிறுவனங்களில் ஒன்றான ஜெயபக்தியும் கலந்து கொள்கிறது எனத் தெரிவித்தார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜூ.
ஆண்டுதோறும் 1.5 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சியானது, புத்தகப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமானப் புத்தகங்களை வாங்கவும், பல்வேறு அங்கங்களில் பங்கேற்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக விளங்குகிறது.
தங்கள் நிறுவனத்தின் தாரக மந்திரமான, நாலும் தெரிய, நாளும் வாசிப்போம் என்பதற்கு ஒப்ப, எல்லாத் தரப்பு மக்களும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிந்து பயன் பெற வேண்டும் என்று டத்தோ டாக்டர் கு. செல்வராஜூ அழைப்பு விடுத்தார்.