சட்டவிரோதக் குடியேறிகளால் நடத்தப்பட்டு வந்த கிளினிக்குகள்: அதிரடிச் சோதனையில் ஒரு பாகிஸ்தான் மருத்துவர் உட்பட 6 வெளிநாட்டவர் கைது

கோலாலம்பூர், மே.21-

சிலாங்கூர் சுங்கை பூலோ, ஷா ஆலாம் மற்றும் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ ஆகிய பகுதிகளில் சட்டவிரோதக் குடியேறிகளால் நடத்தப்பட்டு வந்த கிளினிக்குகளில் குடிநுழைவுத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் லைசென்ஸ் பெற்றிருக்காத ஒரு பாகிஸ்தான் மருத்துவர் உட்பட 6 அந்நிய நாட்டவர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

சட்டவிரோதக் குடியேறிகள், சொந்தமாகக் கிளினிக்குகளை நடத்துவதாகக் கிடைக்கப் பெற்றத் தகவலின் அடிப்படையில் கடந்த இரண்டு வாரக் காலமாக சம்பந்தப்பட்ட கிளினிக் வளாகங்கள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வந்ததாக மலேசியக் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை இந்த மூன்று கிளினிக்குகளிலும் ஏகக் காலத்தில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் லைசென்ஸ் பெற்றிருக்காத ஒரு பாகிஸ்தான் மருத்துவர், பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

23 க்கும் 57 க்கும் இடைப்பட்ட வயதுடைய அறுவரில், பாகிஸ்தான் மருத்துவர், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் காலத்திற்குச் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளார். மூன்று மியன்மார் பெண்களில் ஒருவர் தற்காலிக வேலை பெர்மிட்டைக் கொண்டுள்ளார். மற்றொரு பெண், அகதிக்கான ஐ.நா. கார்டைக் கொண்டுள்ளார். மற்ற பாகிஸ்தான் பெண்கள் உட்பட மூவருக்குச் செல்லத்தக்க பயண ஆவணங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நோயாளிகளின் விபரங்களை உள்ளடக்கிய மருத்துவ அட்டைகள், கிளினிக் முத்திரை, மருத்துவச் சீருடைகள் போன்றவற்றை அமலாக்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இன்னும் சில கினினிக்குகளில் அந்நிய நாட்டவர், உதவி மருத்துவராக அல்லது தாதியராக வேலை செய்யக்கூடும் என்று தாங்கள் சந்தேகிப்பதாக டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

மிகக் குறைந்தக் கட்டணத்தில் நோயாளிகளுக்கு குறிப்பாக அந்நிய நாட்டவர்களுக்கு இவர்கள் சட்டவிரோதமாக மருத்துவச் சேவையை வழங்கி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS